top of page

கோயிலுக்குள் அவரால் நுழைய முடியவில்லை; உடம்பில் நடுக்கம். பூசாரி இவரைப் பார்த்ததும் கூறிவிட்டார், 'இந்த பெண்மணிக்கு செய்வினை செய்துள்ளார்கள், மற்றும் அவள் சாப்பிடும் உணவில் மருந்து கலந்துள்ளார்கள்'

2024, செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் ஒரு மாற்றுத்திறனாளி பெண்மணி (கால் ஊனம்) என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவரின் பெயர் கலையரசி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).


கலையரசிக்குச் சில ஆண்டுகளாக உடம்பில் உணர்ச்சியின்மை, தூக்கமின்மை, வேலையில் கவனமின்மை, வீட்டில் எப்பொழுதும் சண்டை, வெளியே சென்றால் எங்கு போகிறோம் எப்படி வருகிறோம் ஒன்றும் புரியாத நிலை, இப்படிப்பட்ட குறைகள் இருந்தன. மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்திருக்கிறார். அவர் உடம்பில் ஒன்றுமில்லை என்று அனுப்பி விட்டார்கள்.


அதன் பிறகு, குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த கோயிலுக்குள் அவரால் உள்ளே நுழைய முடியவில்லை. உடம்பில் நடுக்கம் முதலான அத்தனை மாற்றங்கள்; அந்த கோவில் பூசாரி இவரைப் பார்த்ததும் கூறிவிட்டார், 'இந்த பெண்மணிக்கு செய்வினை செய்துள்ளார்கள், மற்றும் அவள் சாப்பிடும் உணவில் மருந்து கலந்து உள்ளார்கள்' என்று. அதற்காக அந்த கோயில் பூசாரி ஒரு மருந்தைக் கொடுத்து, 'இதை நீ சாப்பிடு', என்று கூறி, கழுத்தில் ஒரு தாயத்து மற்றும் ஒரு சிறு கயிறு கட்டி, 'எல்லாம் சரியாகிவிடும் பயப்படாதே' என்று அனுப்பினார். அதன் பிறகு இவரின் உடம்பில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை. மாறாக பிரச்சனைகள் அதிகமாகத் தொடர்ந்தன.



அதன் பின், கலையரசியின் நெருங்கிய உறவுப் பெண்மணி ஒருவர் அவரை ஆரணிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள கோயில்களுக்கு அழைத்துப் போனார். பணம் மட்டும்தான் செலவு ஆனது. எந்த இடத்திலும் பிரச்சனை தீரவில்லை. அதுவும் இன்றி பெங்களூர், திருவண்ணாமலை, ஊட்டி, சென்னை இன்னும் நிறைய இடங்களுக்கு அழைத்துச் சென்றும் எங்கும் அவர் குணமாகவில்லை.


 அதன் பிறகு, கலையரசி தான் இருந்த இடமாகிய பெங்களூர் விட்டு சென்னைக்கு குடி வந்தார். சென்னையில் அவர் குடியிருந்த வீட்டில் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறார். யாரோ தன்னிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதைப் போலும், தன்னை யாரோ அடிப்பது போலும், பயமுறுத்துவது போலும் உணர்ந்து இருக்கிறார். சரியாகத் தூங்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, அனைவரின் மேலும் கோபம், ஆத்திரம் மற்றும் வெறுப்பு, அலுவலகத்திலும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமை மற்றும் அலுவலகத்தில் கெட்ட பெயர், இப்படியாக அவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.


சென்னையில் அவர் இருந்த வீட்டின் உரிமையாளர் அவரை கல்பாக்கத்தில் உள்ள ஒரு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த நபரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அவர் இவரைப் பார்த்ததும் இந்த பெண்ணிற்கு செய்வினை செய்துள்ளார்கள் என்றும், அதை எடுப்பதற்கு ரூபாய் 40 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். ரூபாய் நாற்பதாயிரம் கொடுத்து செய்வினை எடுக்கச் செலவு செய்து சில மந்திரித்த பொருட்களை வீட்டுக்குக் கொண்டு சென்று இருக்கிறார். அதன் பிறகும் அவருடைய குறை தீர்ந்த பாடு இல்லை. செய்வினை எடுக்கிறேன் என்று கூறியவர், இவர் பரிகாரங்களைச் சரியாகச் செய்யவில்லை என்றும் அதனால் மீண்டும் செலவு செய்யக் கூறினார்கள்.



இந்த நேரத்தில் தான் அவருடைய சிறு வயது நெருங்கிய தோழியின் அறிமுகம் மீண்டும் கலையரசிக்குக் கிடைத்தது. அந்தத் தோழி அரசுத்துறையில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஓர் உரை நான் வழங்கிய பொழுது, ஆழ்மனத்தின் ஆற்றலைக் கொண்டு அனைத்து மனக்கோளாறுகளையும் போக்க முடியும் என்று கூறியிருந்தேன். அதைக் கவனித்த அந்தத் தோழி சிகிச்சைக்காக கலையரசியை என்னிடம் அழைத்து வந்தார்.


கலையரசியை உட்கார வைத்து அவர் சந்தித்த அனைத்துப் பிரச்சனைகள் மற்றும் துன்பங்கள் குறித்து விளக்கமாக கேட்டுக் கொண்டேன். அவர் தன்னைப் பற்றிக் கூறியது…

நான் எதைப் பார்த்தாலும் அதைக் கண்டு பயம் கொள்வேன். எனக்குத் தலைவலி அதிகமாக இருக்கும், பார்வை சரியாகத் தெரியாது. என் உடல் முழுவதும் அதிக பாரமாக இருக்கும். என்னிடம் யாராவது பேசினால் என்னால் முழுமையாகக் கவனிக்க முடியாது. ஞாபக மறதி அதிகமாக இருக்கும். என் உடல் முழுவதும் ஒரு விதமான நடுக்கம் வந்து கொண்டே இருக்கும். நான் எங்கு இருக்கிறேன் என்று கூட எனக்குத் தெரியாது. சில சமயம் என்னிடம் யாராவது பேசினால் அவர்கள் மீது எனக்கு கோபம், வெறுப்பு அதிகமாக இருக்கும். என்னால் எந்த வேலையும் முழுமையாகச் செய்ய முடியாது. எப்பொழுதும் அசைவ உணவு உண்ண வேண்டும் என்று தோன்றும். மற்றும் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக் கொண்டே இருக்கும். இந்த மாதிரியான அறிகுறிகளாக என்னிடம் தோன்றிக் கொண்டே இருக்கும். எனக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் உடம்பில் நிறைய மாற்றங்கள் தோன்றும். வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற நாட்களிலும் வீட்டில் ஒரு விளக்கு கூட ஏற்ற முடியாது. கோவிலுக்குச் சென்றாலும் அந்த இடத்தில் எனக்கு உடம்பில் நடுக்கம் மற்றும் தலைவலி அதிகமாக இருக்கும். தெய்வத்தை வணங்க முடியாது. இவை அனைத்தும் எனக்கு செய்வினை (பில்லி சூனியம்) வைத்து விட்டார்கள் என்று எனக்கு எப்பொழுது தெரிய வந்ததோ அப்பொழுது இருந்து தான் தொடங்கியது.



ஆழ்மனதின் ஆற்றல் கொண்டு அவரின் அனைத்து மனக்கோளாறுகளில் இருந்து விடுபட்டு எல்லோரையும் போல் சாதாரண வாழ்க்கையில் அவரால் ஈடுபட முடியும் என்பதை எடுத்துக் கூறி, தொடர்ச்சியாக சிகிச்சைக்கு வருமாறு கூறி அனுப்பினேன். பிறகு, என்னிடம் அறிதுயில் என்ற ஹிப்னாடிசம் பயின்ற மாணவர் நரேந்திரன் அவரையும் வைத்துக்கொண்டு சிகிச்சை தொடங்கினோம்.


முதல் நாள் சிகிச்சையின் போது, கலையரசிக்கு என்ன விதமான சிகிச்சை அளிக்கப் போகிறோம் என ஆலோசனை(counselling) வழங்கிய பின் கட்டிலில் படுக்க வைத்து அறிதுயில் என்ற ஹிப்னாடிச மயக்க நிலைக்கு கொண்டு சென்றோம். கலையரசியின் ஆழ்மனதைப் பேச வைத்தோம். மிகுந்த ஆக்ரோஷத்துடனும், கோபத்துடனும் ஆழ்மனது பேயாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு வெளிப்பட்டது. ஏற்கனவே இதுபோன்று கையாண்ட அனுபவத்தினாலும் வெளிப்படுவது ஆழ்மனதுதான் என்று தெரிந்த காரணத்தினாலும் மிகப் பொறுமையுடன் கையாண்டோம். அதனிடம் வந்திருப்பது யார் என்று கேட்ட பொழுது, அது முதலில் சொல்ல மறுத்தாலும், நாங்களாக 'உன் பெயர் எங்களுக்குத் தெரியும், உன் பெயர் மல்லிகா தானே?' என்று கேட்டவுடன் ஆமாம் என்று ஏற்றுக் கொண்டது. அதற்கு ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குடிகார கணவன், மூன்று பிள்ளைகள். மல்லிகா நோய்வாய் பட்டு இறந்துவிட்டார் இளம் பிராயத்திலேயே. இப்போது அதன் ஆன்மா கலையரசியிடம் தஞ்சம் புகுந்திருந்தது. அதை வெளியேற்றி மீண்டும் ஆழ்மனதை பழைய இயல்பான நிலைக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொண்ட பொழுது அது விசித்திரமான நிபந்தனை விதித்தது. அது என்னவென்றால், தன் குடிகாரக் கணவருக்கு இந்த கலையரசியை கல்யாணம் செய்து வைத்து, அதன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு செவிலித் தாயாய் மாற்றினால் தான் இவளை விட்டுச் செல்வேன், அதுவரை எங்கும் போக மாட்டேன் என்று அடம்பிடித்தது. நாங்கள் போய்த்தான் ஆக வேண்டும் என்று கூறினோம்.



2-வது வாரம்…

சிறு முன்னேற்றம் கிடைத்தது. அதனிடம் பேசிப் பேசி ஒரு வழியாய்ப் புரிய வைத்து மீண்டும் கலையரசியிடம் வரக்கூடாது என்று சத்தியம் வாங்கினோம். அது போய்விட்டது என்று நம்பி சிகிச்சை முடித்தோம்.


3-வது வாரம்…

வாரத்தின் நடுவே கலையரசியை அழைத்து விசாரிக்கும் பொழுது தனக்கு சிகிச்சைக்கு முன்பு இருந்த அறிகுறிகள் இருப்பதாய்ச் சொன்னார். மீண்டும் சிகிச்சை கொடுக்கும் பொழுது தான் தெரிந்தது,  அது போகவில்லை என்று. 'நீ சத்தியம் செய்ததன் பிறகும் ஏன் போகவில்லை?' என்று கேட்ட பொழுது, 'சத்தியம் எல்லாம் போங்கு' என்று கூறியது. சத்தியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறினாலும், அது 'போக மாட்டேன்' என்று கூறி பழைய நிபந்தனையையே கூறிக் கொண்டிருந்தது.


4-வது வாரம்…

இந்த வாரம் எப்படியும் வெளியேற்றி விட வேண்டும் என்று உறுதி கொண்டு அதனிடம் பேச ஆரம்பித்த பொழுது, அது ஒரு நிபந்தனை போட்டது. மேல்மலையனூர் என்னும் ஊரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்று, கலையரசிக்கு சுற்றிப் போட்டு, ஐந்து நபர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும். அதனைச் செய்தால், தான் கலையரசியை விட்டுப் போய் விடுவதாகச் சத்தியம் செய்தது. அதன் பின் கலையரசியை விழிப்புணர்வு நிலைக்குக் கொண்டு வந்து, நடந்துவற்றைக் கூறி பரிகாரத்தை செய்யச் சொன்னோம். அவரும் அதன்படியே மேல்மலையனூர் சென்று, பரிகாரத்தைச் செய்து முடிப்பதாகக் கூறினார்.



5-வது வாரம்…

கலையரசியின் ஆழ்மனதை மீண்டும் பேச வைத்த பொழுது, வேறு ஓர் உருவில் இப்பொழுது வந்தது. மல்லிகா போய் ஒரு 19 வயது இளம்பெண்ணின் ஆன்மா கலையரசியின் உடலில் உட்புகுந்து இருந்தது. அடையாறு பாலத்தினருகே அப்பெண் விபத்துக்கு உள்ளாகி இறந்துவிட்டார் என்றும், அதன் ஆன்மா அங்கே சுற்றிக் கொண்டிருந்தது என்றும், கலையரசி பாலத்தின் வழியே போகும்பொழுது அவரிடம் வந்து சேர்ந்ததாகவும் கூறியது. ஆனால் இது, சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு மரியாதையுடன் நடந்து கொண்டதோடு உடனே போய் விடுகிறேன் என்று சத்தியம் செய்தது.


6-வது வாரம்…

இந்த முறை கலையரசியை விட்டு சென்று விட்டதாக எண்ணிய மல்லிகாவின் ஆன்மா மீண்டும் வந்தது. அதனிடம், ஏன் மீண்டும் வந்தாய் என்று கேட்டபோது, தான் கலையரசியை விட்டுச் செல்ல முயன்றும் தன்னால் இவளிடமிருந்து முழுமையாகப் பிரிய முடியவில்லை என்று கூறியது. மேலும், அது சில செய்திகளைக் கூறியது. இவளை விட்டு தான் சென்றாலும், சக்தி வாய்ந்த வேறு சில ஆன்மாக்கள் இவளுக்காகக் காத்திருப்பதாகவும், அவர்களை அண்ட விடாமல் பாதுகாத்து வருவதாகவும் கூறியது. எனினும், தொடர்ந்து அதனிடம் பேசியதன் பிறகு, அது சில நிபந்தனைகளை விதித்தது. அதாவது, கலையரசி தற்போது இருக்கும் அடையாறு வீட்டைக் காலி செய்துவிட்டு தமிழ்நாட்டை விட்டு எங்கோ தூரத்திற்குப் போக வேண்டும் என்றும், ஏதாவது ஒரு கோயில், குறிப்பாக சாய்பாபா கோயிலில் கலையரசி சென்று தங்கிக் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் மற்ற ஆன்மாக்கள் இவரை பிடிக்காமல் இருக்கும் என்றும், அதன் பிறகு இவளை விட்டுச் செல்வேன் என்றும் கூறியது. அதன்படியே கலையரசியின் வீட்டைக் காலி செய்ய வைத்து வேறு இடத்தில் தங்கிக் கொண்டு, அங்கிருந்து  மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு போய் வரச் சொன்னோம்.


7-வது வாரம்…

மீண்டும் கலையரசியின் ஆழ் மனதினைப் பேச வைத்த பொழுது, மல்லிகாவின் ஆன்மா மீண்டும் வந்தது. 'ஏன் மீண்டும் வந்தாய்?' என்று கேட்டதற்கு, கலையரசி அடையாறில் இருக்கும் வீட்டை மட்டும் காலி பண்ணினால் போதாது, அந்த area-வை விட்டு காலி செய்து வெளியேற வேண்டும், அங்கு தற்போது இருக்கும் வேலை செய்யும் இடத்திற்கும் மீண்டும் வரக்கூடாது என்றும், அடையாறில் கலையரசியின் கால் திரும்பப் படக்கூடாது, என்றும் கூறியது. அதன்படியே கலையரசியைச் செய்ய வைக்கிறோம் என்று கூறி மல்லிகாவின் ஆன்மா இவளை விட்டு நிரந்தரமாகப் போக வேண்டும் என்று சத்தியம் செய்ய வைத்தோம். அதன் பிறகு கலையரசி அவள் வேலை பார்த்த இடத்தில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து வேறு இடத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்தோம். பழைய வீட்டையும் காலி செய்ய வைத்து வேறு இடத்தில் தங்க ஏற்பாடு செய்ய வைத்தோம். 


8-வது வாரம்…

இம்முறை மல்லிகாவின் ஆன்மா வெளியேறி விட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் கலையரசியின் ஆழ்மனதைப் பேச வைத்தோம். ஆனால் இந்த முறை புதியதாக ரமேஷ் என்ற பெயரில் ஒர் ஆன்மா வந்தது. ரமேஷ் என்பவர் அடிபட்டு ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருக்கும் பொழுது கலையரசி அந்த வாகனத்தைத் தற்செயலாக பின் தொடர்ந்து சென்று உள்ளார். அந்தத் தருணத்தில், ரமேஷின் உயிர் பிரிந்து கலையரசியின் மீது ஆன்மாவாய்ப் புகுந்து கொண்டது என்று அது சொல்லக் கேட்டோம். பிறகு ரமேஷ் என்ற ஆன்மாவிடம் பேசி அதைப் புரிய வைத்து, கலையரசியிடம் வரக்கூடாது என்று சத்தியம் வாங்கினோம்.


9-வது வாரம்…

இந்த முறை சிகிச்சை அளித்து கலையரசியின் ஆழ் மனதினைப் பேச வைத்த பொழுது இதுவரை இல்லாத வகையில் மிகவும் சாந்தமாய் கலையரசி என்று தன்னுடைய பெயரை சொல்லிக்கொண்டு பேச ஆரம்பித்தது. அதனிடம் இதற்கு முந்தைய தருணத்தில் நடந்தது போல் இனி நடக்கக்கூடாது என்றும், இனி கலையரசியின் ஆழ்மனது எப்பொழுதும் கலையரசியாக இருக்க வேண்டும் என்று கூறி அதனிடம் சத்தியம் வாங்கினோம். அதுவும் தான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் என்று சத்தியம் செய்தது. கலையரசியை விழிப்புணர்வுக்கு கொண்டு வந்ததன் பிறகு அவரிடம் சிகிச்சையில் நடந்ததைக் கூறி இனி கவலைப்பட தேவையில்லை என்று கூறினோம்.


10-வது வாரம்…

இந்த முறை சிகிச்சை அளிப்பதற்கு முன்பு கலையரசியிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு 'இப்பொழுது பழைய அறிகுறிகள் ஏதாவது இருக்கின்றனவா?' என்று கேட்டோம். முதல் நான்கு நாட்கள் எந்த வித அறிகுறியும் இன்றி நன்றாக இருந்ததாகவும், அதன் பிறகு மீண்டும் அறிகுறிகள் வந்திருப்பதாகவும் கூறினார். அவருக்கு சிகிச்சை அளித்து அவரது ஆழ்மனதினைப் பேச வைத்த பொழுது, இந்த முறை ஒரு 80 வயது கிழவராக அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. கலையரசி ஒரு தெருவின் வழியாக நடந்து கொண்டிருந்த பொழுது 80 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் இறந்த துக்க வீடு கடந்து செல்ல வேண்டி இருந்தது. அந்த பெரியவரை எரித்த சாம்பல் கரைப்பதற்கு அந்த வீட்டில் எடுத்து வைத்திருக்கின்றனர். அந்த வழியே கலையரசி சென்ற பொழுது, அவரின் ஆன்மா இவரிடம் வந்து விட்டது. அதனிடம் போய்விடச் சொல்லி, மீண்டும் கலையரசியிடம் வரக்கூடாது என்று சத்தியம் செய்ய வைததோம். அதுவும் போய்விடுகிறேன் என்று கூறி தனது வெற்றிலை டப்பாவையும், ஊன்றுகோலையும் கொடு என்றது. வெற்றி இலை, பாக்குக்குப் பதிலாக ஓர் அட்டையை (visiting card) கொடுத்து இதுதான் வெற்றிலை, பாக்கு என்று கூறி சாப்பிட சொன்னவுடன், அதை வாங்கி மென்று சாப்பிட ஆரம்பித்தது. பிறகு தனது ஊன்றுகோல் வேண்டும் என்று கேட்ட பொழுது, கையில் இருந்த ஒரு பேனாவைக் கொடுத்தவுடன் அதைத் தன்னுடைய ஊன்றுகோல் போல் பாவித்து இரண்டு மூன்று அடி எடுத்து வைப்பது போல் செய்து பிறகு சென்று விட்டது. இப்பொழுது மீண்டும் கலையரசியின் ஆழ் மனதைப் பேச வைத்து, இனிமேல் எந்த தீய சக்தியையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கூறி, கலையரசியாகவே நீ இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கினோம்.


11-வது வாரம்…

இந்த முறை மீண்டும் 

கலையரசியின் ஆழ் மனதைப் பேச வைத்த பொழுது கலையரசியாகவே வந்தது. மீண்டும் அதனிடம், 'நீ இனிமேல் கலையரசியாகத் தான் வர வேண்டும்' என்று சத்தியம் வாங்கி சிகிச்சையை நிறைவு செய்தோம்.


12-வது வாரம்…

இதற்கு முந்தைய முறை சிகிச்சை முடித்த பொழுது ஐந்து நாட்கள் நன்றாக இருந்ததாகவும், அதன் பிறகு சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்ததாகவும், கலையரசி கூறினார். அதாவது கலையரசி வேலையை முடித்துச் சென்ற போது அவ்வழியே ஓர் இறந்த உடலை பூ போட்டுக் கொண்டே இறுதி காரியம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர். கலையரசி பூவினை தெரியாமல் மிதித்து இருக்கிறார். இந்த ஒரு காரணமே அந்த இறந்த நபரின் கோபத்திற்குக் காரணமாக இருந்து அது கலையரசியிடம் வந்துவிட்டது. கலையரசி பூவினை மிதித்த உடனே அந்த ஆன்மா தன்னை ஏதாவது செய்து விடுமோ என்று பயந்து இருக்கிறார். அந்த ஆன்மா மிகவும் ஆக்ரோஷமாக, 'எப்படி இவள் தன் தம்பி ஆசையாக வளர்த்த செடியில் இருந்த பூவைப் பறித்து தன் மீது போட்டதை மிதிப்பாள்? ஆதலினால், இவளைச் சும்மா விட மாட்டேன்', என்றது. அதன் பிறகு, அதனைச் சமாதானம் செய்து, அதனிடம் இனி கலையரசி மீது வரக்கூடாது என்று சத்தியம் வாங்கினோம். அது சென்ற பின்னர், கலையரசியை ஆழ்மனதாக வரவழைத்து, இனி நீ கலையரசியாக மட்டும் இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கினோம். 


13-வது வாரம்…

இடைப்பட்ட நேரத்தில் கலையரசி தன் உடல்நிலை காரணமாக மருத்துவமனை சென்றுள்ளார். அதன் பிறகு, கைபேசியில் பேசிய பொழுது பழைய அறிகுறிகள் மீண்டும் வந்து விட்டதாகக் கூறினார். மீண்டும் அவருக்கு சிகிச்சை கொடுத்து, அவருடைய ஆழ்மனதினைப் பேச வைத்த பொழுது, அது சொல்லிய கதை… மருத்துவமனைக்குச் சென்ற இடத்தில் கலையரசி மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே அங்கிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு உண்டான சாய்வுப் பாதையில் நடந்து சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டு உயிர் பிரிந்த ஆன்மா ஒன்று சுற்றிக் கொண்டிருந்ததாகவும், கலையரசியின் மகிழ்ச்சியான மனநிலை கண்டு வெகுண்டு எழுந்து அவளைப் பழி வாங்குவதற்காக அவளிடம் புகுந்ததாகவும் கூறியது. இப்பொழுது ஆன்மாவாக வந்த அந்த நபர் ஒரு பெண் என்றும், அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்றும், அவருக்கு சர்க்கரை அளவு கூடி அதனால் ஒரு காலை எடுத்து மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் வந்து இறந்ததாகக் கூறியது. இதனைக் கேட்ட பின்னர், அதனை அமைதிப்படுத்தி, அதற்குப் புரிய வைத்து, இனி கலையரசியிடம் வரக்கூடாது என்று சத்தியம் வாங்கினோம். அதன் பின்னர் கலையரசியாகவே ஆழ்மனதை வரவழைத்து, வேறு யாரையும் ஆள்மனதாய் வர அனுமதிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு அதனிடம் சத்தியமும் வாங்கினோம். பிறகு, கலையரசியை விழிப்புணர்வுக்குக் கொண்டு வந்து, 'இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்ட பொழுது, 'இப்பொழுது எந்த அறிகுறியும் இல்லை, நன்றாக இருக்கிறேன்' என்று பதில் வந்தது.


14-வது வாரம்…

கலையரசிக்கு சிகிச்சை அளித்து வந்த பொழுது, அவரைப் பற்றி ஒன்று தெரிந்து கொண்டோம். அதாவது, ஏதாவது ஓர் இறப்பு குறித்த செய்தியைப் பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் பயத்தில், இறந்த நபரின் ஆன்மா தன்னுடைய உடலில் நுழைந்து விடும் என்ற ஓர் எண்ணத்தைப் போட்டுக் கொண்டு விடுகிறார். இந்த பழக்கத்தினால், ஒவ்வொரு ஆன்மாவும் வந்ததன் பிறகு அதை சிகிச்சை மூலம் போக்கினாலும், புதியதாக ஓர் இறப்பு செய்தி தெரிய வரும் பொழுது, இறந்த நபரின் ஆன்மா அவருள் புகுந்து விடுகிறது என்பதை அவர் நம்பி அவர் அதுவாகவே ஆகிவிடுகிறார். இப்படியே ஒவ்வொரு ஆன்மா வெளியேறினாலும் மீண்டும் ஓர் ஆன்மா புதிதாக உள்ளே நுழையும்போது, அது ஒரு தொடர்கதையாக அவரின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்ததனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இதைப் பார்த்ததன் பிறகு, அவர் மனதில் போட்ட இந்தப் பழக்கம் உள்ளிட்ட அனைத்துப் பதிவுகளையும் நிரந்தரமாய் அழித்தால் தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று அதற்கு லிபாசனா தியானத்தையும் அவருக்கு கற்றுக் கொடுத்து தொடர்ந்து செய்ய வைத்தோம். அதன் பிறகு அவருக்கு எந்தவித சிகிச்சையும் இன்றி தொடர்ந்து விபாசனா தியானத்தைச் செய்ய வைத்து அவருடைய மனக்கோளாறில் இருந்து விடுவித்தோம்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page